பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயற்சி
|புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி
புதுவை சட்டசபையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித் துறை பணிநீக்க ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பணிநீக்கம்
புதுவை அரசின் பொதுப்பணித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு வவுச்சர் அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பணி நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து அவர்களை பணி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்தநிலையில் கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணியில் சேர்க்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
இதன் ஒருகட்டமாக இன்று சட்டசபை அருகே ஆம்பூர் சாலை சந்திப்பில் இருந்து சட்டசபை நோக்கி அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததையடுத்து செயிண்ட்பால் வீதியில் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் பின்பக்கமாக திரும்பி மிஷன்வீதி லப்போர்த் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஆம்பூர் சாலை-லப்போர்த் வீதி சந்திப்பில் தடுத்து நிறுத்தினா்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
அப்போது ஊர்வலம் செல்லவோ, முற்றுகை நடத்தவோ அனுமதியில்லை. மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்த பணிநீக்க ஊழியர்கள் மீண்டும் முதலில் கூடிய ஆம்பூர் சாலை சந்திப்புக்கு வந்தனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய அவர்கள் திடீரென தடுப்புகளை தள்ளி முன்னேற முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை ஒரு வழியாக போலீசார் தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
ரங்கசாமியுடன் சந்திப்பு
போராட்ட முடிவில் கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது தங்களை மீண்டும் பணி அமர்த்தக்கோரி மனு அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி பணிநீக்க ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காக உடனடியாக கோப்புகளை தயாரிக்க உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுகொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களின் இ்ந்த போராட்டத்தால் சட்டசபையை சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.