< Back
புதுச்சேரி
புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் - முதல்-மந்திரி ரங்கசாமி
புதுச்சேரி

புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் - முதல்-மந்திரி ரங்கசாமி

தினத்தந்தி
|
7 July 2023 11:43 PM IST

புதுவை தலைமை செயலகத்தில் நிதி தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி

தலைமை செயலகத்தில் நிதி தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தினார்.

மத்திய மந்திரி வருகை

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை புதுச்சேரி வந்தார். கவர்னர் மாளிகையில் அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய். சரவணன்குமார், அரசு தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

ஆய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதிஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்பட அரசு செயலாளர்கள், மாவட்ட கலெக்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி குறித்து அரசு செயலாளர்கள் விளக்கி கூறினார்கள். மேலும் நிதி இல்லாததால் முடங்கியுள்ள திட்டங்கள், அரைகுறையாக விடப்பட்டுள்ள கட்டுமான பணிகள், மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.

ரங்கசாமி கடிதம்

அப்போது நிர்மலா சீதாராமனிடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையை பெஸ்ட் புதுச்சேரி ஆக்க பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க செயல்பட்டு வருகிறோம்.பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்ட பட்டியலில் புதுச்சேரி நம்பர் 1 இடத்தில் உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளால் புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்தை 16-வது நிதிக்குழுவில் சேர்க்கவேண்டும். இதற்கு தேவையான அரசியலமைப்பு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். புதுவையை மாநிலமாகவோ, யூனியன் பிரதேசமாகவோ கருதி சிறப்பு நிதியுதவியையும் அளிக்கவேண்டும்.

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் நிதியுதவியை 90:10 என்று ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்குவதுபோல் வழங்கவேண்டும். சென்னை பொருளாதார பள்ளி வழங்கிய அறிக்கையின்படி மத்திய நிதிக்குழுவிலிருந்து நாங்கள் குறைவாகவே நிதியை பெற்று வருகிறோம்.

முன்னுரிமை கொடுத்து...

மத்திய அரசின் உதவியானது நிதி நிலையை பேணுவதற்கும், சமூக முன்னேற்றத்தை தக்க வைப்பதற்கும் மிகவும் முக்கியமானது ஆகும். எனவே இந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சிக்கல்களை களைவதற்கு சட்ட ரீதியான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மனு

மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்துக்கான நிதிக்கொடையை ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்தவதற்காக ரூ.2,147 கோடியை புதுவைக்கு சிறப்பு நிதியாக வழங்கவேண்டும். சட்ட பல்கலைக்கழகம், மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பிரிவுகளுக்கு இந்த நிதியை வழங்கவேண்டும்.

இந்த ஆண்டு வரும் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் புதுச்சேரிக்கு ரூ.600 கோடி அதிகமாக வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்