கலை மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள்
|புதுச்சேரி மக்கள் கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி மக்கள் கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இளைஞர்களுக்கு எதிர்காலம்
டெல்லி மத்திய கலாசாரத்துறையின் சங்கீத நாடக அகாடமி மற்றும் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் கடந்த 16-ந் தேதி இசை, நடனம் மற்றும் நாடக திருவிழா (அமிரித் யுவா கலோத்சவ்) தொடங்கியது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகையில், 'நாம் சுதந்திரம் அடைந்ததற்கு கலையின் பங்கு பெருமளவு இருந்தது. நாட்டில் இளைஞர்கள் மிக அதிகமாக உள்ளதால் நாட்டிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை அடைய வேண்டும். கடினமான இலக்கை கொண்டு அதனை அடைய தீவிரமாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்' என கூறியுள்ளார்.
கலையின் மீது ஆர்வம்
கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர்கள். புதுச்சேரி அரசின் நோக்கம் கலைஞர்களை ஊக்கப்படுத்தி கலைகளை வளர்ப்பது தான். கலைகள் வளர வளர புதுச்சேரியும், இந்தியாவும் வளரும். புதுச்சேரி அரசு கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சங்கீத நாடக அகாடமி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சியை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.