சுற்றுலா பயணிகள் வருகையால் திக்குமுக்காடிய புதுச்சேரி
|தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது.
புதுச்சேரி
சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்தநிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது..
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனால் புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் ரெஸ்டோ பார், மதுபார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நகரின் பல்வேறு இடங்களில் வலம் வந்தன. இதனால் புதுவை அண்ணா சாலை, காமராஜ் சாலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, ஓயிட் டவுன் பகுதி, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில், முக்கிய சந்திப்புகளில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறில்
அதிகாரிகள் திடீர் ஆய்வு
புதுச்சேரிக்கு பெரும்பாலும் தமிழக அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் புதுச்சேரிக்கு வரும் தமிழக அரசு பஸ்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை என பயணிகள் தரப்பில் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று மறைமலையடிகள் சாலையில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது புதுவை பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்ற பஸ்களை மறித்து டிரைவர், கண்டக்டர்களை எச்சரித்தனர்.