"புதுச்சேரி உலக அளவில் தனித்துவமான முத்திரை பதித்துள்ளது" - ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்
|புதுச்சேரி உலக அளவில் தனித்துவமான முத்திரை பதித்துள்ளது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
ஜனாதிபதி வருகை
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக திரவுபதி முர்மு நேற்று புதுச்சேரி சென்றார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் சென்ற அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அங்கு புற்றுநோய் பிரிவில் ரூ.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன கதிரியக்க கருவியை தொடங்கி வைத்தார். பின்னர் ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கத்துக்கு வந்து காணொலி காட்சி மூலம் வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதி கொண்ட ஆயுஸ் ஆயுர்வேத ஆஸ்பத்திரியை திறந்துவைத்தார்.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
பாலின சமத்துவம்
புதுச்சேரி யோகாவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வின்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக முன்னேற்ற குறியீட்டு மதிப்பெண் 2022-ல் புதுவை முதல் இடத்தில் உள்ளது. தனிநபர் சுதந்திரம், தங்குமிடம், குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக திகழ்கிறது. இங்கு பாலின விகிதமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. புதுவை மக்கள் பாலின சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவை உண்மையான முற்போக்கு மனநிலையின் குறியீடுகளாகும். மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான நவீன மற்றும் உணர்திறன் அணுகுமுறைக்காக நான் அவர்களை பாராட்ட வேண்டும். குறிப்பாக உயர்கல்வி சிறப்பாக மேம்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். சுதேசி தர்ஷன் திட்டத்தின்கீழ் புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தனித்துவமான முத்திரை
சுற்றுலா வளர்ச்சியுடன் மருத்துவ சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி தேசிய அளவிலும் உலக அளவிலும் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது. புதுவை மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பிடத்துக்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை 4 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் சாமி கும்பிட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்றும் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக புதுவை- கடலூர் சாலையில் உள்ள முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு சுற்றுலாத்துறை சார்பில் நடந்த தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், மாகி செண்டை மேளம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.