புதுச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு பி.ஆர்.டி.சி. பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது
|புதுவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் பி.ஆர்.டி.சி. பஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
புதுச்சேரி
புதுவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் பி.ஆர்.டி.சி. பஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
நாகர்கோவில்
புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகம் சார்பில் (பி.ஆர்.டி.சி.) புதுச்சேரியிலிருந்து நாகர்கோவிலுக்கு நாள்தோறும் மாலை 6.25 மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கால ஊரடங்கின்போது இந்த பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இந்த பஸ்கள் இயக்கப்படாததால் மிகவும் சேதமடைந்தன. இந்தநிலையில் தற்போது பழைய பஸ்களை புதிதாக பாடி கட்டி இயக்கப்படுகிறது.
மீண்டும் இயக்கம்
அதன்படி நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்சும் புதிதாக பாடி கட்டப்பட்டுள்ளது. இதற்கு தகுதி சான்றிதழ் பெறும் பணிகள் நடந்து வருகிறது. தகுதி சான்றிதழ் பெற்று தமிழக அரசின் ஒப்புதலை பெற்று பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் இந்த பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப்போல் 45 இருக்கைகளுடன் (புஸ் பேக் வசதி) இந்த பஸ் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இயக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு புதுவை வந்தடைகிறது. நபர் ஒருவருக்கு பஸ் கட்டணம் ரூ.525 ஆகும்.