பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்
|புதுவையில் பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலைய்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளாக பணி செய்யும் பெண் கண்டக்டர்கள் 12 பேரும், 8 ஆண்டுகளாக பணி செய்யும் தினக்கூலி ஊழியர்கள் 4 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். புதுவையில் இருந்து காரைக்காலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட 4 பேர் தொடர்ந்து புதுவையிலேயே பணி செய்து வருகின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி இன்னும் வழங்கப்படவில்லை. எனவே ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஜூலை மாத சம்பளம் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.