< Back
புதுச்சேரி
இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசாரம்
புதுச்சேரி

இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசாரம்

தினத்தந்தி
|
11 Jun 2023 11:10 PM IST

அரியாங்குப்பம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து வீட்டில் விபசாரம் நடத்திய கர்ப்பிணி உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து வீட்டில் விபசாரம் நடத்திய கர்ப்பிணி உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் குழு

புதுச்சேரி காராமணிக்குப்பம் தரிக்காரர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 27). இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் (சமூக வலைதளம்) மூலம் குழு ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் விபசாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களை ஆசை வலையில் சிக்க வைத்து, குறைந்த கட்டணத்தில் ஜாலியாக இருக்க வாய்ப்பு என சொல்லி அழைப்பு விடுக்கப்படும். அதைப்பார்த்து பின் தொடர்பவர்களை ராம்குமார், அரியாங்குப்பம் அருகே உள்ள ஒரு வீட்டுக்கு விபசாரத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கமாம்.

வீட்டில் விபசாரம்

இதுகுறித்த தகவல் புதுச்சேரி சைபர் கிரைம் போலீ சாருக்கு தெரியவரவே, ராம்குமாரின் இன்ஸ்டாகிராம் குழுவை ரகசியமாக கண்காணித்து வந்தது. மேலும் இதுதொடர்பாக அரியாங்குப்பம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குற்றப்பிரிவு போலீசார் சிரஞ்சீவி, வேல்முருகன், ராஜேஷ் ஆகியோர் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்மநபர்கள் அடிக்கடி வந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

கணவன், மனைவி

அப்போது அந்த வீட்டில் 7 மாத கர்ப்பிணியான சித்ரா (வயது 30) என்பவர் இருந்துள்ளார். அப்பெண்ணை பார்த்த போலீசாருக்கு முதலில், தவறான இடத்துக்கு வந்து விட்டோமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் சற்று தயங்கியவாறே போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சித்ரா, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தனது காதல் கணவரான முன்னாசாகு (32) என்பவருடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலைவிரித்து அவர்களது வீட்டிலேயே விபசார தொழிலை நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

5 பேர் கைது

அதைத்தொடர்ந்து புரோக்கராக செயல்பட்ட செல்போன் கடைக்காரர் ராம்குமார், கர்ப்பிணியான சித்ரா, அவரது கணவர் முன்னாசாகு மற்றும் விபசாரத்துக்கு வாடிக்கையாளராக வந்த புதுவை உப்பளம் பகுதியை சேர்ந்த சபரிநாதன் (33), கடலூர் பழைய துறைமுகம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் (33) ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கடலூர் இளம்பெண்ணும் போலீசாரால் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதானவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், ரூ.2,500 ரொக்கம், காண்டம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விபசார வழக்கில் கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்