நடிகர்கள், நாடக கலைஞர்கள் ஊர்வலம்
|சங்கரதாஸ் சுவாமிகள் 100-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர், நாடக கலைஞர்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.
புதுச்சேரி
சங்கரதாஸ் சுவாமிகள் 100-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர், நாடக கலைஞர்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.
நினைவு தினம்
நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 100-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையொட்டி கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் என்ற சிவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் திரைப்பட, நாடக கலைஞர்கள் ஊர்வலமாக வந்தனர். காந்திவீதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் விசுவ நாதன் தொடங்கி வைத்தார்.
நடிகர்கள் ஊர்வலம்
ஊர்வலத்தில் திரைப்பட நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விக்னேஷ், புதுச்சேரி நாடக கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர், தமிழர் பாரம்பரிய குழுவினர், மக்கள் கலைக்கழகம் தெருக்கூத்து கலைஞர்கள், திண்டுக்கல், கரூர், மன்னார்குடி, மணப்பாறை நாடக கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது சங்கரதாஸ் சுவாமிகள் உருவப் படத்தை அலங்கரித்து எடுத்துச்சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி நடனமாடி கலைஞர்களை உற்சாகப் படுத்தினார்.
நினைவிடத்தில் மரியாதை
இந்த ஊர்வலம் எஸ்.வி.பட்டேல் சாலை, காந்திவீதி, வழியாக கருவடிக்குப்பம் மயானத்தை அடைந்தது. அங்கு அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழா முடிந்த பின்னர் நடிகர் விஜய் ஆண்டனி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 5-க்கும் மேற்பட்ட முதியவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.