தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை உயர்த்தக் கூடாது
|தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கட்டண நிர்ணய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி
தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கட்டண நிர்ணய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
புதுவை தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டணம் இடைக்காலமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஏற்க மறுத்ததுடன், கோர்ட்டுக்கு சென்றுள்ளன.
இந்தநிலையில் கல்வி கட்டண நிர்ணயக்குழுவின் 2-வது கட்ட ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கந்தம்மாள் தலைமையில் லாஸ்பேட்டை பிப்மேட் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பங்கஜ்குமார் ஜா மற்றும் புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா, புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு புதுவையில் தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணம் உள்ளது. இந்தநிலையில் தற்போது கட்டணத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது. கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க சட்ட வடிவமைப்பு ஏற்படுத்த வேண்டும். புதுவையில் அதுபோல் இல்லை.
மாணவர்கள் 4½ ஆண்டுகள் தான் கல்லூரியில் படிக்கின்றனர். ஆனால் 5½ ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தனியார் மருத்துவக்கல்லூரிக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது. கடந்த ஆண்டு வசூலித்த அதே தொகையை தான் தற்போதும் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் இறுதி
இதற்கு பதில் அளித்து பேசிய கல்வி கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் கந்தம்மாள், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே தனியார் மருத்துவக்கல்லூரிக்கான கல்வி கட்டணம் விரைவில் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.