முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
|முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் சமூக வலைதளத்திலும் பிறந்தநாள் வாழ்த்துசெய்துபதிவிட்டுள்ளார். சிக்கிம் மாநில முதல் மந்திரி பிரேம் சிங் தமாங், மத்திய மந்திரி முருகன் உள்பட மத்திய மந்திரிகள் பலரும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பூஜை
முன்னதாக காலையில் எழுந்து புத்தாடை அணிந்த ரங்கசாமி தனது தாய், தந்தையின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திலாசுப்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்களிடம் வாழ்த்து பெற்றார்.
பின்னர் கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். சாமிக்கு அவரே பூஜை செய்தார். அதன்பின் கோவில் அருகே உள்ள வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடர்ந்தார்.
ஆளுயர மாலை
புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளம் முழங்க வந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அவருக்கு ஆளுயர மாலை, சால்வை அணிவித்தும், பழங்கள், பூக்கூடை கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தபடி இருந்தனர்.
பின்னர் இரும்பை மகாகாளேசுவரர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில்களுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் ரங்கசாமி கலந்துகொண்டார். அங்கேயே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
அன்னதானம்
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு பிற்பகலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டார். மேலும் அங்கு அன்னதானம் வழங்கினார்.
என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். தொகுதிதோறும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரால் நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருட்கள், அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அமைச்சர்கள் வாழ்த்து
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு பூக்கூடைகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், நேரு, சிவசங்கரன், பிரகாஷ்குமார், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், அரசு தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு மடிக்கணினி
பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டன. 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிளஸ்-2 படிக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் 300 பெண்களுக்கு சேலைகள் வழங்கினார். இதில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.