முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
|முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் வாழ்த்து
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது 74-வது பிறந்தநாளை தொண்டர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இதற்காக இன்று அதிகாலையில் எழுந்த அவர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து தாய், தந்தை படங்கள் முன் வணங்கினார். இதற்கிடையே அவரது வீடு முன் முக்கிய பிரமுர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து சொல்வதற்காக திரண்டு வந்து இருந்தனர். அவர்களை சந்தித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து அவரது வீட்டுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஆளுயர மாலைகள், பூங்கொத்துகள், சால்வைகள், பழங்களின் தட்டு வரிசைகள், ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை என எடுத்து வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்பா பைத்தியசாமி கோவில்
அதன்பின் தனது வீட்டில் இருந்து கதிர்காமம் முருகன் கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து திலாசுப்பேட்டை விநாயகர் கோவில், இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு ரங்கசாமி வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு வந்து இருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் சிவனடியார்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி, பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதவிர பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 'முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பெருமதிப்பிற்குரிய தலைவர். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் தமிழிசை, மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய மந்திரிகள் தொலைபேசி மூலமாகவும், வலைதளங்கள் மூலமாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவரது வாழ்த்து செய்தியில், 'முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளில் அவர் என்றும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் திகழ எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள்
இதுதவிர சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், திருமுருகன், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாநில என்.ஆர்.காங்கிரஸ் செயலாளரும் டாக்டருமான லூயி கண்ணையா, அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.