< Back
புதுச்சேரி
கர்ப்பிணி, ஒரே மோட்டார் சைக்கிளில்  2 பேருடன் வந்ததால் ரூ.1,000 அபராதம்
புதுச்சேரி

கர்ப்பிணி, ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேருடன் வந்ததால் ரூ.1,000 அபராதம்

தினத்தந்தி
|
21 Nov 2022 10:22 PM IST

ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த நிறைமாத கர்ப்பிணியை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் காக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த நிறைமாத கர்ப்பிணியை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் காக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அபராதம் விதிப்பு

புதுவை மாநிலத்தில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக மோட்டார் சைக்கிளில் கணவர், உறவினர் ஆகியோருடன் வந்த கர்ப்பிணியை ரூ.1000 அபராதம் செலுத்தக்கோரி, ரோட்டில் 2 மணி நேரம் நிறுத்தி காக்க வைத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

நிறைமாத கர்ப்பிணி

கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (19), நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மருத்துவர்கள், இலக்கியாவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரைத்தனர்.

உடனே முரசொலி தனது மனைவி இலக்கியாவை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் கலையரசி, இலக்கியாவுக்கு பின்னால் அமர்ந்திருந்தார். அவசரம் காரணமாக, ஒரே மோட்டார் சைக்கிளில் கர்ப்பிணி தனது கணவர் மற்றும் உறவுக்கார பெண்ணுடன், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் நோக்கி வந்தனர்.

ரூ.1,000 அபராதம்

ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே மூவரும் வந்தபோது, அங்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் மூவரும் வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்தார்.

அவரிடம், தனது மனைவிக்கு பிரசவவலி ஏற்பட்டது. எனவே அவரை அவசரமாக மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டியதாகி விட்டது என்றும், உதவிக்காக உறவுக்கார பெண்ணையும் அழைத்து வந்தேன் என பணிவுடன் முரசொலி கூறி இருக்கிறார். ஆனால், அந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரோ துளியும் இரக்கம் இன்றி கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக, மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு, 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விதியை மீறி வந்துள்ளீர்கள். முறையாக ஹெல்மெட் அணியவில்லை. எனவே, ரூ.1,000 அபராதம் செலுத்தும்படி கூறி இருக்கிறார்.

கண்ணீருடன் கெஞ்சல்

அப்போது முரசொலி, தன்னிடம் மருத்துவ செலவுக்கு மட்டுமே பணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதை பொருத்தப்படுத்தாத சப்-இன்ஸ்பெக்டர், அவரிடம் ரூ.1,000 அபராதம் செலுத்தி விட்டு தான் மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முடியும் என்று கறாராக கூறி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த நிறைமாத கர்ப்பிணி இலக்கியாவும், உறவுக்கார பெண் கலையரசியும் அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தனர். மேலும் அவரிடம் தனக்கு வலி அதிகமாக வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் இலக்கியாக கண்ணீர் மல்க கெஞ்சினார்.

2 மணி நேரம் காத்திருப்பு

ஆனால், அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த சப்-இன்ஸ்பெக்டர், அபராதத்தை கட்டி விட்டு, இந்த இடத்தை விட்டு செல்லுங்கள் எனக்கூறியபடி, அடுத்த வரும் வாகனங்களை சோதனை செய்ய சென்று விட்டார். எனவே கர்ப்பிணி, அவரது கணவர் மற்றும் உறவுக்கார பெண் ஆகிய மூவரும் செய்வதறியாது 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே கால்கடுக்க நின்று தவித்து கொண்டு இருந்தனர். இதற்கிடையே பிரசவ வலி அதிகமானால் இலக்கியா நிற்க முடியாமல் சாலையின் ஒரம் நடைபாதையில் அமர்ந்தார்.

அப்போது கர்ப்பிணியின் நிலை கருதி மேலும் சிலர் அந்த சப்-இன்ஸ்பெக்டரை சந்தித்து கெஞ்சி கேட்டனர். அதற்கும் அவர் கொஞ்சம் கூட கரையவில்லை.

இதற்கிடையே இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசி அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தின் சாவியை வாங்கி கர்ப்பிணி பெண்ணின் கணவரிடம் கொடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தனது மனைவியை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மனிதாபிமானமற்ற செயல்...

போக்குவரத்து போலீஸ் அதிகாரியின் மனிதாபிமானமற்ற செயலை பலர் கடிந்து கொண்டனர். பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரியே, நிறைமாத கர்ப்பிணியிடம் மனிதாபிமானமாற்ற முறையில் நடந்து கொள்கிறாரே, புதுச்சேரி காவல்துறையில் இப்படியும் அதிகாரிகளா? என்று பேசிய படி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்