காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இல்லை
|புதுவை காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருப்பது காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆய்வில் தெரிய வந்தது.
புதுச்சேரி
புதுவை காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருப்பது காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆய்வில் தெரிய வந்தது.
காவல்நிலையங்களில் ஆய்வு
புதுவை காவல்நிலையங்களில் நடைபெறும் சித்தரவதைகளை தடுக்க அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதன் பதிவுகளை அவ்வப்போது பார்வையிட ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்தநிலையில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் புதுவையில் உள்ள காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம், ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல், எஸ்.டி.பி.ஐ. கட்சி அமைப்பாளர் பரக்கத்துல்லா, திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நகரம், கிராமப்பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா இல்லை
அப்போது எந்த காவல் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா இல்லை என்பது உறுதியானது. ஒரு சில காவல்நிலையத்தில் வாசலில் வருபவர்களை கண்காணிக்க கேமராக்கள் வெளிநபர்களால் பொருத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை காவல்நிலையங்களில் மட்டும் அடுத்த மாத இறுதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.அடுத்தகட்டமாக புதுவையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.