வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரம்
|புதுவையில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்திதா (வயது 21) லாஸ்பேட்டை புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் டெக்னிக் படிப்பை படித்து வந்தார். அவர் வெளியில் இருந்து வாங்கி வந்த விஷ ஊசியை தங்கும் விடுதியில் வந்து தனக்குத்தானே போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரசானூரை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் (வயது24) தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் தற்கொலை முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு போலீசார் ராஜேஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
கரசானூரில் அவர் வசித்த வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டி கிடந்தது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.