< Back
புதுச்சேரி
இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து போலீசார் ரோந்து
புதுச்சேரி

இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து போலீசார் ரோந்து

தினத்தந்தி
|
27 July 2023 10:16 PM IST

காரைக்கால் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மீன்பிடி படகுகளில் சோதனை நடத்தப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மீன்பிடி படகுகளில் சோதனை நடத்தப்பட்டது.

கூட்டு ரோந்து

இந்திய கடலோர காவல்படை, காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில், தங்களது ரோந்துக்கப்பலை நிறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கடலோர காவல் படை போலீசாருடன் மாதம் ஒரு முறை கடலில் கூட்டு ரோந்தில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் தலைமையில் கடலோர காவல் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்த்தினி மற்றும் போலீசார் கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ரோந்து படகில் சென்று மீனவர்களின் படகுகளில் சோதனை செய்தனர். அப்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா?

படகில் வந்த மீனவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள், கடலில் ஏதாவது சந்தேகம் படும்படியான படகுகள், நபர்களை பார்த்தீர்களா? என விசாரித்தனர். கடலில் மர்மநபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே காரைக்கால் கடலோர காவல் நிலையம் அல்லது இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

மேலும் மீனவர்கள் தங்களின் அடையாள அட்டையை எப்போதும் வைத்திருக்க வேண்டும், படகில் அளவுக்கு அதிகமாக டீசல் மற்றும் மதுபானங்களை எடுத்துச்செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்