< Back
புதுச்சேரி
மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகன் கைது
புதுச்சேரி

மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகன் கைது

தினத்தந்தி
|
2 July 2023 10:40 PM IST

தவளக்குப்பத்தில் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பத்தில் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆபாச பேச்சு

தவளக்குப்பம் பகுதியில் தனியார் (அரவிந்த்) கண் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அடிக்கடி மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி காவேரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசி எண்ணுக்கு வரும் செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

சென்னையில்...

அப்போது அந்த நபர், சென்னை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கந்தனூர் பாலையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 22) என்பது தெரியவந்தது. மெக்கானிக்கான இவர், சென்னை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

போலீஸ் அதிகாரி மகன் கைது

தனது பாட்டியின் கண் பரிசோதனைக்காக கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நோட்டீசில் புதுச்சேரி கண் மருத்துவமனையின் செல்போன் எண் இருந்துள்ளது. அதனை குறித்து கொண்டு தினமும் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.

இதுபோன்று இவர் மீது கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவின் தந்தை சென்னையில் போலீஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்