போலீசார், வக்கீல்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
|அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப போலீசார், வக்கீல்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அறிவுரை கூறினார்.
காலாப்பட்டு
அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப போலீசார், வக்கீல்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அறிவுரை கூறினார்.
புத்தாக்க பயிற்சி
புதுவை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி காலாப்பட்டு-மாத்தூர் சாலையில் உள்ளது. இங்குள்ள அரங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு வக்கீல்கள் அறிவியல் புலன் விசாரணை மற்றும் வழக்கு தொடுப்பதில் சிறந்து விளங்குவதற்காக 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடந்தது.
விழாவில் புதுவை சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். புதுவை நீதிபதி இளவரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
போலீஸ்துறையினர் மற்றும் அரசு வக்கீல்கள் சமூகத்தில் ஏற்படக்கூடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நவீன யுக்திகளை பயன்படுத்தி பல்வேறு நூதன குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உதவியாக இருக்கும்
இந்த சம்பவங்கள் பற்றி கோர்ட்டுகளில் விசாரணை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காகவே இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை போலீசார், வக்கீல்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் பேராசிரியை லலிதாம்பாள் நன்றி கூறினார். இந்த புத்தாக்க பயிற்சியில் மூத்த வக்கீல்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி நிறைவு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நிறைவுரையாற்றுகிறார்.