மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க போலீசார் ஆலோசனை
|புதுவையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க போலீசார் ஆலோசனை நடத்தினர்.
பாகூர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராய கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மதுக்கடை, சாராயக்கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கி கூறுகையில், 'மதுபானம், சாராயம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் அதிகளவு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.