பிளஸ்-1 மாணவர் அரசாலாற்றில் குதித்து தற்கொலை
|தடையை மீறி செல்போன் கொண்டு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் காரைக்கால் அரசலாற்றில் குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டான்.
காரைக்கால்
தடையை மீறி செல்போன் கொண்டு வந்ததை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் காரைக்கால் அரசலாற்றில் குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டான்.
பிளஸ்-1 மாணவர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கட்டுமான தொழிலாளி. இவரது மகன் சிவராஜன் (வயது 16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கு இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சாதாரண உடையில் வந்து செல்கின்றனர்.
தடையை மீறி செல்போன்
செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை மீறி நேற்று பள்ளிக்கு சிவராஜன் செல்போன் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி பள்ளி நிர்வாகம் கண்டித்த நிலையில் பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோருக்கு பயந்து பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வந்து அங்கு கடற்கரையில் சிவராஜன் சுற்றித்திரிந்துள்ளார்.
பிணமாக மீட்பு
இந்தநிலையில் இன்று காலை காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டி அரசலாற்று பகுதியில் சிவராஜன் உடல் மிதந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, ஆற்றில் கிடந்த மாணவரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து பெற்றோர் அங்கு வந்து சிவராஜனின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கலங்க வைப்பதாக இருந்தது.
தடையை மீறி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்ததால் ஆற்றில் குதித்து பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியது.