செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய வாய்க்கால்
|காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் செடி, கொடிகள் வளர்ந்து வாய்க்கால் புதர் மண்டிக்கிடக்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால்
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் செடி, கொடிகள் வளர்ந்து வாய்க்கால் புதர் மண்டிக்கிடக்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
புதர் மண்டிய வாய்க்கால்
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எம்.ஜி. நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அன்னுசாமி வாய்க்காலின் கிளை வாய்க்காலில் தான் நகரின் மேற்கு பகுதியில் இருந்து வரும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வெளியேறும் கழிவுநீரும் வாய்க்காலில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
குடியிருப்புவாசிகள் அச்சம்
வாய்க்காலில் பன்றிகள் உருண்டு தெருக்களில் ஓடுகின்றன. கொசுத்தொல்லையும் அதிகரித்திருப்பதுடன் விஷ ஜந்துகளின் புகலிடமாகவும் மாறி வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். மழைக்காலத்தில் வாய்க்காலில் ஓடவேண்டிய கழிவுநீர் நகரின் முக்கிய சாலைகளில் ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மழைக்காலத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.