< Back
புதுச்சேரி
நலத்திட்டங்களுக்கு நிதியை திரட்ட வரிகளை உயர்த்த திட்டம்
புதுச்சேரி

நலத்திட்டங்களுக்கு நிதியை திரட்ட வரிகளை உயர்த்த திட்டம்

தினத்தந்தி
|
16 July 2023 11:10 PM IST

நலத்திட்டங்களுக்கு நிதியை திரட்ட புதுவையில் வரிகளை உயர்த்துவது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

புதுச்சேரி

நலத்திட்டங்களுக்கு நிதியை திரட்ட புதுவையில் வரிகளை உயர்த்துவது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மக்கள் நலத்திட்டங்கள்

புதுவை மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்று முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி தர வேண்டும் என்று முதல்- அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் புதுச்சேரி வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய நித்துறை துணைச் செயலாளர் ரத்ன கோஷ் கிஷோர் சவுரே, சமீபத்தில் புதுவை அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நிதி விவகாரத்தில் புதுவை அரசு சுய சார்புடன் இருக்க வேண்டும். எனவே வருவாய் வளங்களை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் நலத்திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் வருவாயை பெருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி உதவியை கூடுதலாக ஒதுக்க வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது.

வரி வருவாய்

இதனை தொடர்ந்து சொத்துவரி, ஜி.எல்.ஆர். மதிப்பு மற்றும் பிற கட்டமைப்புகளை அதிகரிக்க புதுச்சேரி அரசின் பரிசீலனைக்கான முன்மொழிகளை தொடங்க வருவாய் ஈட்டும் துறைகளுக்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், வணிக வரி துறைகளில் வருவாயை பெருக்க தேவையான திட்டங்களை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுவை மாநில வரி வருவாயில் கலால்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு கலால்துறை மூலம் ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்தது. இது முந்தைய ஆண்டை விட ரூ.300 கோடி அதிகமாகும். இந்த நிதியாண்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.476 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. எனவே கலால்வரியை மேலும் உயர்த்தலாமா? என்று அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தீவிர ஆலோசனை

மதுவின் விலையை உயர்த்தும் போது புதுவைக்கு வரும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. மக்களை பாதிக்கும் வகையில் வரி விதிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்