நீட் அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு
|நீட் தேர்வு அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வில் விருப்ப பாடங்களை தேர்வு செய்ய சென்டாக் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி
நீட் தேர்வு அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வில் விருப்ப பாடங்களை தேர்வு செய்ய சென்டாக் அறிவுறுத்தி உள்ளது.
3-வதுகட்ட கலந்தாய்வு
நீட் தேர்வு அல்லாத கலை அறிவியல் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப பாடங்களை மாணவர்கள் தங்களது டேஷ்போர்டை பயன்படுத்தி வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3-வது சுற்றுக்கு மாணவர்கள் புதிதாக பாடப்பிரிவுகளை சமர்ப்பிக்கவேண்டும். ஏனெனில் முதல், 2-ம் சுற்றில் கொடுக்கப்பட்ட பாடப்பிரிவுகள் தானாகவே நீக்கப்படும். 3-வது சுற்றில் மாணவர்கள் சமர்ப்பித்த பாட பிரிவுகளின் அடிப்படையில் புதிய பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டால் முதல், 2-ம் சுற்றில் சேர்ந்த பாடப்பிரிவு தானாகவே ரத்து செய்யப்படும் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 12 வகையான பட்டய, பட்ட பாடப்பிரிவுகள் இந்த 3-வது சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பல் மருத்துவம்
மேலும் முதுகலை பல் மருத்துவ படிப்புக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் 2-வது கட்ட கலந்தாய்வுக்கான காலியிட விவரங்களையும் சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் 16 அரசு இடஒதுக்கீட்டிற்கான இடங்களும், 14 நிர்வாக இடஒதுக்கீட்டிற்கான இடங்களும் உள்ளன.
இதேபோல் நீட் தேர்வு அடிப்படையிலான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வுக்கான காலியிட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடங்களை வருகிற 5-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வுக்கு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.25 ஆயிரமும், பிற பிரிவினர் ரூ.12 ஆயிரத்து 500-ம் செலுத்த வேண்டும். நிர்வாக இடஒதுக்கீட்டில் சேர விரும்புவோர் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும்.