காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்
|நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருநள்ளாறு
காரைக்கால் மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக நெடுங்காடு தொகுதி திகழ்ந்தது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காவிரி நீர் முறையாக வராததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தற்போது ஆயிரம் ஏக்கராக குறைந்தது. நெடுங்காடு தொகுதி முழுவதும் தற்போது 300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. காவிரிநீர் முறையாக வராததால் நெற்பயிர்கள் கருகி சருகாக மாறியது. இதுமட்டுமின்றி 300 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலமாக காட்சியளிக்கிறது.
விவசாயிகள் வேதனை
ஒரு சில இடங்களில் பாய் நாத்து வைத்து ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் முத்தி போய் வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களையும் விவசாயத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.