கருவேல காட்டுக்குள் விபசாரம்
|கோட்டுச்சேரி அருகே கருவேல காட்டுக்குள் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 அழகிகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி அருகே கருவேல காட்டுக்குள் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 அழகிகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
விபசாரம்
நெடுங்காட்டை அடுத்த வடமட்டம் முக்கூட்டு ஆலமரம் பகுதியில் ஆப்பிள் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணீஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுகால் ரமேஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் தகவல் கிடைத்த இடத்துக்கு விரைந்தனர்.
இதை பார்த்த விபசார கும்பல், அங்கிருந்து தப்பி அருகில் உள்ள கருவேல காட்டுக்குள் சென்று பதுங்கினர். பின்னர், டார்ச் லைட் உதவியுடன் கருவேல காட்டில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
3 பேர் கைது
இதில் விபசார கும்பலின் தலைவி சங்கரபாணி மனைவி ராதா (வயது 39) மற்றும் 5-க்கும் மேற்பட்ட ஆண்களை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புரோக்கர்கள் மயிலாடுதுறை மாவட்டம் எடுத்துக்காட்டி சாத்தனூரைச் சேர்ந்த முகமது கஜ்ஜாலி (49), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வேலங்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்துக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கருவேல காட்டுக்குள் விபசார கும்பலை விரட்டி பிடிக்கும்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீசுக்கு முள் கிழித்து காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.