< Back
புதுச்சேரி
புதுவை மருத்துவ மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரி

புதுவை மருத்துவ மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி

தினத்தந்தி
|
9 July 2023 11:41 PM IST

புதுவையில் மருத்துவ மாணவரிடம் ஆன்லைன் முதலீடில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் மருத்துவ மாணவரிடம் ஆன்லைன் முதலீடில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவ மாணவர்

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த 3-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் ஏறியது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார்.

ரூ.7¾ லட்சம் மோசடி

தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார். அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர். அதன்பின்னரே அவர்கள் ஏமாற்றியது சசிதரனுக்கு தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

படித்தவர்கள் தான் அதிகம்

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிகபேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. ஆன்லைனில் முதலீடு செய்தால் இரடிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.


மேலும் செய்திகள்