'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை வரவேற்கிறேன்
|‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ர திட்டத்தை வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ர திட்டத்தை வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரங்கசாமி ஆதரவு
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது. இதுவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் இன்று ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுவை முதல்-அமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை வரவேற்கிறேன். முன்பு வாக்குச்சீட்டு நடைமுறையில் இருந்த போதே ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்துள்ளது. தற்போது வாக்கு எந்திரத்தின் மூலம் தேர்தல் நடைபெறும். அது மட்டும் தான் வித்தியாசம். எனவே, ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடு உள்ளது. அதனை நான் வரவேற்கிறேன். இந்தியாவை 'பாரதம்' என்று பெயர் மாற்றுவதையும் வரவேற்கிறோம். பாரதநாடு, பழம்பெரும் நாடு என்பதால் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.