< Back
புதுச்சேரி
பிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை
புதுச்சேரி

பிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை

தினத்தந்தி
|
8 Sept 2023 11:38 PM IST

நெட்டப்பாக்கம் அருகே பிறந்த நாளில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓடஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே பிறந்த நாளில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓடஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பிரபல ரவுடி

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்தவர் பெர்ணான்டஸ். அவரது மகன் மணிமாறன் என்ற டூம் மணி (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முத்தியால்பேட்டையை சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கில் சிறையில் இருந்த மணிமாறன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து மணிமாறன் மடுகரையில் உள்ள தனது நண்பர் ஜெகன் வீட்டில் தங்கியிருந்தார். அவ்வப்போது கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்.

ஓடஓட விரட்டி கொலை

இன்று அதிகாலை 5.30 மணியளவில் மணிமாறன் அதே பகுதியில் காலிமனையில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்றபோது, காரில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திபுதிபுவென இறங்கியது.

ஏதோ விபரீதம் நடக்க போகிறதை உணர்ந்த மணிமாறன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீட்டை நோக்கி ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து விரட்டியது. அப்போது அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் மணிமாறன் தவறி விழுந்தார்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது.

பிறந்தநாளில் உயிரை விட்ட சோகம்

ரவுடியாக வலம் வந்த மணிமாறனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதனை அவர் நண்பர்களுடன் சேர்ந்து விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்கு முன்பே காரில் வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்த சோகம் நடந்துள்ளது.

தகவல் அறிந்த மடுகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழக்குப்பழி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி அன்பு ரஜினி கொலைக்கு, பழிக்கு பழியாக மணிமாறன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸ் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்