பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
|ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வில்லியனூர்
ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜனாதிபதி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசுமுறை பயணமாக வருகிற 7, 8-ந்தேதிகளில் புதுச்சேரி வருகிறார். லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வரும் அவர் அங்கிருந்து ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்ளும் அவர் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். மேலும் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தையும் பார்வையிடுகிறார்.
கங்கா ஆரத்தி
மாலையில் சமீபத்தில் புஷ்கரணி விழா நடந்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் அவர் சங்கராபரணி ஆற்றில் நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் புதுவை கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் இரவு தங்குகிறார். 8-ந்தேதி காலை அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில் செல்கிறார். அங்கு அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
ஜனாதிபதியின் வருகை நேரம், நிகழ்ச்சிகளின் நேரம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா தலைமையில் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், அரசு செயலாளர்கள் முத்தம்மா, வல்லவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் நாரா.சைதன்யா, பிரிஜேந்தர் குமார் யாதவ், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், பக்தவச்சலம், சுவாதி சிங் ஆகியோர் ஜிப்மர் கலையரங்கம் உள்பட ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கு செய்ய வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து திருக்காஞ்சி கோவில் மற்றும் சங்கராபரணி ஆற்றில் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.