அரசு விழாவில் பங்கேற்க வாடகை கார்களில் வலம் வரும் அதிகாரிகள்
|புதுவையில் அரசு விழாவில் பங்கேற்க அதிகாரிகள் வாடகை கார்களில் வலம் வருகின்றனர்.
அரியாங்குப்பம்
அரசு சார்பில் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் ஜீப் மற்றும் கார்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பராமரிக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அதிகாரிகள், அரசு வாகனங்களில் பழுது என காரணம் காட்டி, தங்களுக்கு நெருங்கிய உறவினர்களின் வாடகை கார்களை பயன்படுத்தி, அதற்கான வாடகை கட்டணத்தை அரசிடமே வசூல் செய்து வருகின்றனர். வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு ஒரு வாடகை சொகுசு கார், உதவி பொறியாளருக்கு ஒரு கார், இளநிலை பொறியாளருக்கு ஒரு கார் என தனித்தனி சொகுசு காரில் வலம் வருகின்றனர். அரசு திட்டப்பணிகளுக்கு பங்கேற்பதற்கு மட்டுமின்றி சொந்த பயன்பாட்டுக்கும் அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் போலீஸ் நிலையங்களில் இருந்த சேதமடைந்த ஜீப்புகளுக்கு பதிலாக புதிய ஜீப்புகள் வழங்கப்பட்டது. அதுபோல, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் சேதமடைந்த ஜீப்புகளுக்கு பதிலாக அரசு சார்பில் புதிய ஜீப் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.