மீன் அங்காடி, இறைச்சிக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
|காரைக்காலில் காலரா அச்சம் எதிரொலியாக, மீன் விற்பனை அங்காடி, இறைச்சிக்கடைகளில், புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காரைக்கால்
காரைக்காலில் காலரா அச்சம் எதிரொலியாக, மீன் விற்பனை அங்காடி, இறைச்சிக்கடைகளில், புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு காலரா அச்சம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், கெட்டுப்போன மாம்பழம், மீன், கோழி, இறைச்சிகளால் காலரா பரவுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யும்படி, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரனுக்கு, கலெக்டர் முகமது மன்சூர் உத்தரவிட்டார்.
அதன்படி, காரைக்காலில் உள்ள பழக்கடைகள், மீன்மார்க்கெட், இறைச்சிக்கடைகளில் அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பழக்கடைகளில் வீணாகிப்போன மாம்பழங்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. ரசாயனம் கொண்டு பழங்களை பழுக்க வைக்க கூடாது. மீறி விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கெட்டுப்போன இறைச்சி அழிப்பு
தொடர்ந்து காரைக்கால் பாரதியார் வீதி, பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல்களில் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், சுமார் 150 கிலோ கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டிறைச்சி பிரிட்ஜில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை அங்கேயே பினாயில் ஊற்றி அழித்தார்.
பின்னர், காரைக்கால் நேரு மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டார். மணல் மீது மீன், இறால்களை வைத்து விற்கக்கூடாது. கெட்டுப்போன மீன்களை விற்கக்கூடாது என மீன் விற்கும் பெண்களிடம் அறிவுறுத்தினார்.
கடும் வாக்குவாதம்
இதனால் மீன் விற்கும் பெண்கள் ஆவேசமடைந்தனர். பல இடங்களில் பலவித கெட்டுப்போன உணவு களை விற்பனை செய்கிறார்கள். அதனை கண்டுகொள்ளாமல், மீனவர்கள் தினசரி கடலில் பிடித்து வரும் மீன்களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். இதில் கெட்டுப்போன மீன்கள் எங்கே வந்தது? என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேற்கொண்டு மீன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளாமல், கெட்டுப்போன மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.