தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
|அரசின் அனுமதி இன்றி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
புதுச்சேரி
சபாநாயகர் எச்சரிக்கை
புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதிப்பு கொடுப்பதில்லை என்று புகார் எழுந்தது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கூட அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிதி, சுகாதாரம், தேர்தல் துறைகளை வைத்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகரிடம் இருந்து தேர்தல் தவிர பிற துறைகள் பறிக்கப்பட்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மோரே வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லி சென்றார்
இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து சபாநாயகர் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை சட்டசபையில் உள்ள கருத்தரங்கு அறைக்கு அழைத்து பேசினார். அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே தலைமை செயலாளர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதுகுறித்து சபாநாயகர் செல்வத்திடம் கேட்டபோது, `புதுவை அரசின் ஒப்புதலின்றி ஜவகர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்புகள் மாற்றப்பட்டது. இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் கேட்ட போது, முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை விளக்கம் தரவில்லை' என்றார்.
இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வெளிநாடு செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் கவர்னர், முதல்-அமைச்சரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால் இதுவரை அனுமதி பெற்றதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் புதுச்சேரி அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.