வட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதல்
|திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, வடமாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருபுவனை
திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, வடமாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 வழிச்சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, அச்சாலையில் திருவண்டார்கோவில் பகுதியில் எப்.சி.ஐ. குடோன் அருகில் வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த ஜெயபாலன், ஜெயக்குமார், அம்பேத்கர் ராஜ் உள்ளிட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலையில் கொட்டப்பட்டுள்ள கற்கள் கரடு முரடாக உள்ளது. பொதுமக்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் அதனை சரி செய்யுமாறு தெரிவித்தனர்.
மோதல்
இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, உச்சக்கட்டமாக உள்ளூர் இளைஞர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வடமாநில தொழிலாளர்களான உத்தர பிரதேசத்தை சேர்ந்த தேவர்ஷா திருபாத்தி (வயது 40), மெஷின் ஆபரேட்டர் இந்திர குமார்சிங் (38) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உள்ளூர் இளைஞர்கள் சிலரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காயம் அடைந்தவர்கள் கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.