< Back
புதுச்சேரி
பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது
புதுச்சேரி

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 4:36 PM GMT

புதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காவி உடையணிந்து போலீசை திசைதிருப்பியது அம்பலமானது.

தொடர் நகை பறிப்பு

புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த வள்ளி (வயது 55). கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணி செய்து வருகிறார். கடந்த 14-ந் தேதி பணியை முடித்து வழுதாவூர் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

இதேபோல் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி (48). அவர் நூறடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

அதேபோல் அண்ணா சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை

இந்தநிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி சென்று கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் மராட்டியத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

வடமாநில வாலிபர் கைது

இந்தநிலையில் பெரம்பை சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் புதுவையில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட முகமது ஜாபர் குருஷி என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவரின் கூட்டாளியான வாரிஷ் கான் உத்தரபிரதேசம் தப்பிச்சென்றது தெரியவந்தது. மேலும் நகைகளை விழுப்புரத்தில் உள்ள உறவினர் மூலமாக வேறொருவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்