< Back
புதுச்சேரி
முதல்-அமைச்சருடன் மோதல் இல்லை - சபாநாயகர் செல்வம் விளக்கம்
புதுச்சேரி

முதல்-அமைச்சருடன் மோதல் இல்லை - சபாநாயகர் செல்வம் விளக்கம்

தினத்தந்தி
|
25 Oct 2023 4:33 PM GMT

முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மோதல் இல்லை என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

சபாநாயகர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சந்திரபிரியங்கா நீக்கம்

அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்கா நீக்கம் குறித்த உத்தரவு கடந்த 21-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இருந்த அவரது பெயர் பலகை அகற்றப்பட்டது.

அவரது அலுவலக அறையில் இருந்த அவருடைய சொந்த பொருட்கள் காலி செய்யப்பட்டு, அவரின் தனி செயலாளர் மூலமாக அந்த அறையின் சாவி சட்டப் பேரவை செயலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், மேசை, நாற்காலி போன்றவை அமைச்சரவை அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டதால் வார விடுமுறை மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை என்பதால் பாதுகாப்பு கருதி அந்த அறைக்கு சட்டப்பேரவை செயலாளரால் சீல் வைக்கப்பட்டது.

அலுவலக நடைமுறை

நேற்று அந்த அறையின் சாவி அமைச்சரவை அலுவலகத்தின் தலைமை அதிகாரி என்ற முறையில் முதல்-அமைச்சரின் தனி செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் அந்த அறையை திறந்து அங்கிருந்து பொருட்களை சரி பார்த்த பிறகு மீண்டும் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இது ஒரு சாதாரண அலுவலக நடைமுறை தான்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் இல்லை

மேலும் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'எனக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே மோதல் என்பது வேடிக்கையாக உள்ளது. நாள்தோறும் நான் முதல்-அமைச்சரை சந்திக்கிறேன். நாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து பல முடிவுகளை எடுக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும், மோதலும் இல்லை' என்றார்.

மேலும் செய்திகள்