புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 2 மணி வரை அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
|வழிபாட்டுத் தளங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், வழிபாட்டுத் தளங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கலெக்டர் வல்லவன் அறிவித்துள்ளார்.