புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|பாகூரில் ஏற்கனவே திருமணமானவருக்கு 3-வது மனைவியான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரெங்கா டூடு (வயது 45). கன்னியக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மணப்பட்டு ராயல் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி மனைவிகள் பிரிந்து சென்று விட்டனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தையே சேர்ந்த கெங்காமணி (23) என்பவரை 3-வதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சொந்த ஊருக்கு செல்லும் உறவினர் ஒருவருடன் செல்ல கெங்காமணி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரெங்காடூடு மனைவியை சமாதானப்படுத்திவிட்டு, வெளியே சென்றுவிட்டார். இந்தநிலையில் கெங்காமணியின் வீடு நீண்டநேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு கெங்காமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 4 மாதங்களே ஆனநிலையில் 3-வது மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து தாசில்தாரும் விசாரணை நடத்தி வருகிறார்.