புதிய பஸ் நிலைய வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
|புதுவையில் கடைகள் ஒதுக்கக்கோரி புதிய பஸ் நிலைய வியாபாரிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி
கடைகள் ஒதுக்கக்கோரி புதிய பஸ் நிலைய வியாபாரிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்டுமான பணி
புதுவை புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் பஸ் நிலைய கிழக்கு பகுதியில் புதுவை பிராந்தியத்துக்குள் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
சாலை மறியல்
இதற்கு பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்புகள் அமைப்பதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும். கட்டுமான பணிகளை தொடங்கும் முன் தங்களுக்கு வேறு இடங்களில் கடைகளை ஒதுக்கி தரவேண்டும், புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்யவேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பஸ்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் கிடைத்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடை பிரச்சினை தொடர்பாக நகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார்கள். இதன்பின் வியாபாரிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.