வியாபாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி
|பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாக சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
புதுச்சேரி
பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாக சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
பெரிய மார்க்கெட்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை பெரிய மார்க்கெட்டை முழுவதுமாக இடித்துக்கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இடித்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்துவிடும், எனவே 4 கட்டமாக இடித்து கடைகளை கட்ட வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று பெரிய மார்க்கெட்டை புதிதாக கட்ட பூமிபூஜை போட திட்டமிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வியாபாரிகள் ஆயத்தமானதால் பூமி பூஜை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபை வளாகத்தில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஏ.கே.டி.ஆறுமுகம், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோரும் பெரிய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் பேசும்போது, பொதுமக்கள், வியாபாாரிகளின் நன்மைக்காக பெரிய மார்க்கெட்டை நவீனமயமாக்கி புதிதாக கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்சினையை சுமுகமாக தீர்க்க கவர்னரும், முதல்-அமைச்சரும் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.
தரை தளத்திலேயே...
அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் பேசும்போது, மார்க்கெட்டில் தற்போது கடை வைத்திருக்கும் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கிதரப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
அப்போது, தரைதளத்தில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் தரைதளத்திலேயே கடைகளை கட்டித்தர வேண்டும் என்றனர். ஆனால் அவ்வாறு கடைகள் கட்டினால் அளவு சிறியதாக இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
அதை தவிர்க்க காய்கறி கடைகள் தவிர்த்து ஒரு சில கடைகளை முதல் தளத்துக்கு கொண்டு சென்றுதான் ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகளின் வசதிக்கான லிப்ட், சாய்தள பாதைகள் அமைத்து தரப்படும் என்றும், நேரு வீதியை நோக்கி இருக்கும் கடைகளின் வடிவில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வியாபாரிகள் அனைவரும் கடைகளை இடித்துக்கட்டுவதை ஆதரிப்பதாகவும், ஆனால் அதை 4 கட்டமாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு தரப்புக்கும், வியாபாரிகளுக்கும் இடையே சில நேரங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.
2 கட்டமாக...
கடைகளை இடித்து ஒரே கட்டமாக முழுமையாக கட்டுவதில் தலைமை செயலாளர் உறுதியாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்காத வியாபாரிகள் அப்படியானால் அவரை மாற்ற வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினார்கள். இறுதியாக கடைகளை 2 கட்டமாக இடித்து கட்டலாம் என்றும் இதுதொடர்பாக தலைமை செயலாளரிடம் பேசுவது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த யோசனை தொடர்பாக மற்ற வியாபாரிகளுடன் கலந்துபேசி தெரிவிப்பதாக வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எந்தவித முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது.