கடலோர காவல் படை கப்பலை பார்வையிட்ட என்.சி.சி. மாணவர்கள்
|காரைக்காலில் கடலோர காவல் படையினாரின் கப்பலை என்.சி.சி மாணவர்கள் பார்வையிட்டனர்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி என்.ஐ.டி. நிறுவனத்தில் என்.சி.சி. மாணவர்களின் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ராணுவ நடைபயிற்சி, துப்பாக்கி சுடுதல், சிறந்த ஒழுக்கம், தலைமை பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் ஒரு பகுதியாக காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்த இந்திய கடலோர காவல் படையின் "அமயா" கப்பலை என்.சி.சி. மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது கப்பலின் செயல்பாடு, இந்திய கடலோர காவல் படையின் பணிகள் குறித்து கப்பலின் துணை கமாண்டர் அக்ஷ டி மோகித் விளக்கினார். அதனை தொடர்ந்து "அமயா" கப்பல் குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கர்னல் எல்.கே.ஜோஷி, கப்பல் கேப்டன் கமண்டென்ட் ஜஸ்பிரித் சிங் தில்லான், என்.சி.சி. அதிகாரிகள் கேப்டன் காமராஜ், லெப்டினன்ட் பாபு, ஹவில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.