தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை
|சந்திரபிரியங்கா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரிக்க தயராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி
சந்திரபிரியங்கா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரிக்க தயராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீக்கமா?, ராஜினாமாவா?
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரான சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கடிதம் கொடுத்தார். அதில் தான் சாதிய, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்துறை அனுமதிக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அதை தெரிந்து கொண்டு சந்திர பிரியங்கா ராஜினாமா செய்ததுபோல் அறிவித்ததாக கவர்னர் விளக்கமளித்தார்.
9 பக்க கடிதம்
இந்தநிலையில் தனது செயல்பாடுகள் தொடர்பாக சந்திரபிரியங்கா 9 பக்க கடிதத்தை வெளியிட்டார். அதில் தனது பதவி காலத்தில் செய்த பணிகளை பட்டியலிட்டு இருந்தார்.
இதனிடையே சந்திரபிரியங்காவுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு கருத்து தெரிவித்தன. வழக்கமாக ஒரு அமைச்சர் ராஜினாமா செய்தாலோ, நீக்கம் செய்யப்பட்டாலோ அதுகுறித்து விவரங்கள் உடனடியாக கவர்னர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்படும். அவர்கள் வகித்த துறைகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்படும். அந்த மாதிரியான தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.
தேசிய ஆணையத்தில் புகார்
மாறாக, சந்திரபிரியங்கா விவகாரத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலை மட்டும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் வகித்து துறைகளை யார் வகிக்கிறார்கள்? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் சந்திரபிரியங்கா தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சாதிய, பாலின தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித:து காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக ஆதிதிராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு புகார்களாக அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை
சந்திரபிரியங்கா விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? என்ற விசாரணைக்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போதுதான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுவை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு பெண் அமைச்சரையும் நீக்கியது தொடர்பான விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கான அவசியம் என்ன? என்று கேள்வியும் எழுப்பியதாக தெரிகிறது.
மீண்டும் பதவி
மேலும் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில், பதவியிலிருந்து விலக்க நெருக்கடி அளித்தவர்கள் யார்? அவர்களைவிட செயல்பாட்டில் எந்த விதத்தில் குறைந்துபோனோம்? சந்திரபிரியங்காவுக்கு எதிராக ஆட்சியாளர்கள் அனைவரும் பேசிவருவது எதனால்?. இதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சந்திரபிரியங்காவுக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி புதுவை மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வழிவகை செய்யவேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற அதிரடிகளால் புதுவை அரசியலில் சூடு குறையாமல் இருந்து வருகிறது.