< Back
புதுச்சேரி
நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடிப்பு
புதுச்சேரி

நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
5 Oct 2023 5:23 PM GMT

கதிர்காமத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

கதிர்காமத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைவீதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.

சிறிய பெட்டிக்கடை முதல் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் இணைந்து கதிர்காமம் பகுதியில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

சிறைபிடிப்பு

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்ததுடன், அந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் வியாபாரிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் வாகனத்தை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்