< Back
புதுச்சேரி
மின்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற எம்.எல்.ஏ.
புதுச்சேரி

மின்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
8 Aug 2023 4:19 PM GMT

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்துறை அலுவலகத்திற்கு பொதுமக்களுடன் சென்று எம்.எல்.ஏ. பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திரு-பட்டினம்

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்துறை அலுவலகத்திற்கு பொதுமக்களுடன் சென்று எம்.எல்.ஏ. பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் மின்வெட்டு

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மின்துறையின் கீழ் இயங்கும், நிரவி-திரு-பட்டினத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒரு ஆண்டாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்பட்டால் அதனை பழுதுநீக்க போதுமான ஊழியர்கள் இல்லை என்று தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் மாதந்தோறும் வழங்கவேண்டிய, மின் ரசீது 3 மாதத்திற்கு ஒரு முறை அபராதத்துடன் வழங்குவதால், மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனிடம் முறையிட்டனர். தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பூட்டு போட முயற்சி

இந்நிலையில் முறையாக செயல்படாத மின்துறை அலுவலகம் எதற்கு? என கூறி, திரு-பட்டினம் மின்துறை அலுவலகத்தை, நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ. பொதுமக்களுடன் சென்று முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களும், எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில், அனைத்து குறைகளும் சரிசெய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என நாக.தியாகராஜன் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றார்.

மேலும் செய்திகள்