சமையல் அறையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
|காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் இன்று கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டது. தலத்தெரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் நடுவண் சமையலகத்தை திடீரென்று திருமுருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது, மதிய உணவிற்கான உணவு சமைக்கப்பட்டு, அங்கிருந்து காரைக்கால் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதற்காக சாதாரண மினிவேனில் உணவு பாத்திரங்களை ஏற்றினர். இதனை பார்த்த எம்.எல்.ஏ. நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கொண்டுசெல்லும் மதிய உணவை, இப்படி சாதாரண மினிவேனில், எந்தவித பாதுகாப்பும், சுகாதாரமும் இல்லாமல் கொண்டுசென்று வழங்கினால் எப்படி? என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, எம்.எல்.ஏ. திருமுருகன் கூறுகையில்,'புதுச்சேரி பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கமானது, மாநிலம் முழுவதும் 21 வாகனங்களை கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் உணவு வழங்குவதற்கு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.. வாகனத்தில் பிரதம மந்திரியின் போஷான் திட்டத்தின் மதிய உணவிற்கான வாகனம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். வாகனம் தூய்மையாக இருக்க வேண்டும். வாகனத்தின் ஒட்டுநர் மற்றும் உதவியாளர் சீருடையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. அப்படிதான் புதுச்சேரியில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காரைக்காலில் சமைத்த உணவுகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மூடப்படாமலும், வெறும் பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு, காற்றால் பறந்து போகக்கூடிய நிலையில் உள்ளது' என்றார். ஆய்வின் போது, காரைக்கால் மாவட்ட மேல்நிலைகல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.