< Back
புதுச்சேரி
தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்
புதுச்சேரி

தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்

தினத்தந்தி
|
19 Oct 2023 10:23 PM IST

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது பிரச்சினையை எழுப்புவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் உறுதியளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உத்தரவின்படி அனுப்பப்படும் கோப்புகளில் துறை செயலாளர்கள் கேள்வி எழுப்பி திருப்பி அனுப்புவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அவர்கள் மீது அமைச்சரவை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிகாரி விடுவிப்பு

இந்தநிலையில் நேற்று நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி தவிர அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விடுவிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா நிதித்துறை அமைச்சரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவினை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் ஒன்றுகூடி தலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.

சபாநாயகர் ஆலோசனை

இதைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் தனது அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், ரிச்சர்ட், நேரு, சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளர் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவரை நேரடியாக அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சரமாரி கேள்வி

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அலுவலகத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா அழைக்கப்பட்டார். அவர் அரசு செயலாளர் கேசவனுடன் அங்கு வந்தார். அவரிடம் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசிக்காமல் துறை செயலாளர்களின் இலாகாக்களை மாற்றுவது எப்படி? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை தொடுத்தனர். மேலும் அரசின் கோப்புகளை தேவையில்லாமல் திருப்பி அனுப்புவது? திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது தொடர்பாகவும் கடுமையாக கண்டித்தனர்.

இதனால் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா அதிர்ச்சியடைந்தார். அவரால் ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின் இறுக்கமான முகத்தோடு அங்கிருந்து தலைமை செயலாளர் புறப்பட்டுச் சென்றார்.

அறிவுறுத்தினோம்

அதன்பின் சபாநாயகர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து விவாதித்தோம். இதுதொடர்பாக தலைமை செயலாளரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. பரவலாக அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தோம்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து 7 மாதங்கள் ஆகிறது. ஆனால் 40 சதவீத நிதிதான் செலவிடப்பட்டு உள்ளது. மீதி நிதியை விரைவாக செலவிட கூறியுள்ளோம். உப்பனாறு வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க கூறியுள்ளோம். திட்டங்கள் தொடர்பாக அனைவருடனும் ஆலோசித்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

மேலும் செய்திகள்