நைலான் கயிற்றில் சிக்கி மெக்கானிக் படுகாயம்
|காரைக்காலில் சாலை நடுவே கட்டப்பட்டிருந்த நைலான் கயிற்றில் சிக்கி மெக்கானிக் படுகாயமடைந்தார்.
காரைக்கால்
காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது31). மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் மெக்கானிக் வேலை பார்த்து வந்தாா். அவரது மனைவி கவிதாஞ்சலி. நேற்று அய்யப்பன் ஸ்கூட்டரில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் ஒப்பிலார்மணியர் குளத்துமேடு, வடமறைக்காடு பள்ளி அருகே கார்த்தி என்பவர் வீடு கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளிக் கொண்டிருந்தார். இதனால் சாலையின் குறுக்கே யாரும் வராதவாறு நைலான் கயிறு ஒன்றை கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
இதை சரியாக கவனிக்காமல் வந்த அய்யப்பனின் கழுத்தில், கயிறு சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.