< Back
புதுச்சேரி
தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகள்
புதுச்சேரி

தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகள்

தினத்தந்தி
|
16 Jan 2023 11:03 PM IST

திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி இறைச்சி, மீன் விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி

திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி இறைச்சி, மீன் விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

இறைச்சி, மீன் கடைகள்

புதுச்சேரியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று இறைச்சி, மீன் கடைகள் செயல்படக்கூடாது. மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட சில மார்க்கெட்கள் மட்டும் மூடப்பட்டு இருந்தது.

ஆனால் முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையோர ஆடு, கோழி இறைச்சி கடைகளும், மீன் கடைகளும் அதிகாலை முதல் திறந்திருந்தன.

இதேபோல் அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இறைச்சி, மீன்களை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.

அபராதம்

இது பற்றிய தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில் துளசிராமன் தலைமையில் 2 குழுவினர் ரோந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்த இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை அப்புறப்படுத்தினர். இருப்பினும் ஒரு சில கடைகளில் இறைச்சி விற்பனை செய்ததை கண்டறிந்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரி ஜெய்சங்கர் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி 26 கடைகளுக்கு ரூ.10,700 அபராதம் விதித்தனர்.

நகராட்சி அதிகாரிகள் சென்ற பின்னர் மீண்டும் கடைகளை திறந்து தொடர்ந்து இறைச்சி வியாபாரம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்