< Back
புதுச்சேரி
அரசுப்பள்ளி மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்

தினத்தந்தி
|
21 Sept 2023 11:48 PM IST

10 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

10 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

10 சதவீத ஒதுக்கீடு

புதுவையில் சென்டாக் மூலம் அரசு இடஒதுக்கீட்டில் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.2.25 லட்சத்தை அரசு செலுத்துகிறது.

1 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்விக் கட்டணம் ரூ.4 லட்சம் என கல்விக் கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரங்கசாமி ஆலோசனை

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் (37 பேர்) பெரும்பாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாணவர்-பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்கள் சிலருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்து பேசினர். அப்போது இதுகுறித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு செயலாளர்கள் ஜவகர், முத்தம்மா, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

அரசே செலுத்தும்

தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், '10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தனர். எனவே அவர்களின் முழு கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்று செலுத்திவிடும். தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அந்த மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்க வேண்டாம்' என்றார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், காரைக்காலுக்கு தேவையான காவிரி நீர் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, புதுவையின் பங்கினை பெற தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார். மேலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் அளித்த புகார் பற்றி கேட்ட போது அது சம்பந்தமாக எனக்கு முழுமையாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்