பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
|புதுவையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி முதலியார்பேட்டை தெய்வநாயகர் வீதியை சேர்ந்தவர் கணபதி என்ற மஜா கணபதி (வயது 32). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சி. முகவரின் வீட்டில் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் உப்பளம் கல்லறை தெரு - அம்பேத்கர் சாலை சந்திப்பில் நின்றுகொண்டு இருந்த கணபதி அந்த வழியாக வந்த பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி நானும் ஜெயிலுக்கு சென்று வந்துள்ளேன். இனிமேல் நானும் ரவுடி தான் என்று மிரட்டியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கணபதியை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.