மதகடிப்பட்டு-மடுகரை சாலை துண்டிப்பு
|சிமெண்டு சாலை அமைக்கும் பணியால் மதகடிப்பட்டு-மடுகரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருபுவனை
சிமெண்டு சாலை அமைக்கும் பணியால் மதகடிப்பட்டு-மடுகரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சிமெண்டு சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக எம்.என்.குப்பம், அரியூர், கண்டமங்கலம், திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பாலங்களின் அருகில் கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதகடிப்பட்டு பகுதியில் தற்போது சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
சாலை துண்டிப்பு
இதனால் மதகடிப்பட்டு-மடுகரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மண்ணை கொட்டி வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். மாறாக வாகனங்கள் அனைத்தும் அங்காளம்மன் கோவில் தெரு, சந்தைதோப்பு வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சந்தைதோப்பு பகுதியில் சிறு மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
சிமெண்டு சாலை அமைக்க இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே அதுவரை சந்தை தோப்பு வழியாக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக சாலை அமைக்க வேண்டும். மேலும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சந்தைதோப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.